டில்லி
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிகளின் பரிசோதனை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளின் செயல்பாடு, வாராக்கடன், நிதிநிலை உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒவ்வொரு வருடமும் ரிசர்வ் வங்கி பரிசோதனை செய்வது வழக்கம். இந்த பரிசோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவது இல்லை. இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் கேட்கப்பட்டதற்கு இந்த அறிக்கைகளை தர ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாக தகவல் ஆணையம் தெரிவித்தது.
இதை ஒட்டி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கி சோதனை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என ஆர்வலர் எஸ் சி அகர்வால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அவர் அந்த மனுவில் நீதிமன்றத்துக்கும் ரிசர்வ் வங்கி இந்த தகவல்கள் அளிக்காததால் இது நீதிமன்ற அவமதிப்பாகும் என குறிப்பிட்டிருந்தர்.
இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் சார்பில் வருடாந்திர வங்கி பரிசோதனை அறிக்கைகளில் வங்கியின் பல முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருப்பதால் அதை வெளிப்படையாக அளிக்க முடியாது என வாதிட்டது. இதை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
”தகவல் அறியும் சட்டத்தின்படி வங்கிகள் வெளிப்படையான நடைமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதால் வங்கிகளில் வருடாந்திர பரிசோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி தர மறுப்பது சட்டத்துக்கு எதிரானதாகும். ஆகவே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிகளின் பரிசோதனை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது/