டில்லி
உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நாளைக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதில் பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
இது தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சிறையில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரும், கருணை அடிப்படையில் குஜராத் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 8 ஆம் தேதி பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. குற்றவாளிகள் அனைத்து குற்றவாளிகளும் 21 ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்குச் செல்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி குற்றவாளிகள் 11 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் குற்றவாளிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நாளைக்குள் அனைவரும் சரணடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.