டில்லி:

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கும் வகையில் விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மீது,  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில்,  முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில், உடனே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து,  ப.சி.யின் முன்ஜாமின் மனுமீது இன்றே  விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் விசாரிப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், பிற்பகலில், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று  நீதிபதி ரமணா மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் விசாரணை பட்டியலில் சிதம்பரம் மனுமீதான விசாரணை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.