டில்லி
குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார்
கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகன் எம் சந்தனகவுடர் பணி புரிந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 1958 ஆம் வருடம் மே மாதம் 5 ஆம் தேதி பிறந்த இவர் 1980 ஆம் வருடம் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.
கடந்த 2003 ஆம் வருடம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2004 முதல் நிரந்தர நீதிபதியாக மாற்றப்பட்டார். அதன் பிறகு அவர் கேரள உயர்நீதிமன்றத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டு அங்கு 2016 முதல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்.
சுமார் 62 வயதாகும் இவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் குர்கான் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 12.30 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.