டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வழக்கறிஞர்களைக் கிண்டல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வானாளவ புகழ்ந்திருந்தார்.

‘’மோடி சகலகலா வல்லவர்..உலகளாவிய அளவில் சிந்திக்கிறார். உள் நாட்டுக்கு ஏற்றபடி அந்த சிந்தனையைச் செயல் படுத்துகிறார்’’ என்று அவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

’’ஒரு நீதிபதி இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது..’’ என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

இது நீதிபதி மிஸ்ராவை காயப்படுதியது.

வழக்கறிஞர்கள், தங்கள் விருப்பம் போல் கருத்துச் சொல்லலாம். கண்டனங்களைப் பதிவு செய்யலாம்.  நீதிபதியால் முடியாதே!

வழக்கறிஞர்களுக்குப் பதில் சொல்லச் சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று காத்திருந்தார்.

கிடைத்தது.

இரு தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு அவர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

டெல்லியில் உள்ள விளையாட்டு பள்ளியை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு அது.

பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் சிங்வி ஆஜரானார். அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

’’உச்சநீதிமன்ற உத்தரவு சரியே’’ என்று தீர்ப்பளித்த நீதிபதி மிஸ்ரா, தனது  ஆதங்கத்தை வெளிப்படுத்த முற்பட்டார்.

விசாரணை முடிந்து, தீர்ப்பும் முடிந்த பின்னர் வழக்கறிஞர் சிங்வியைப்  பார்த்து, ’’உங்களைப் பற்றி நல்ல விஷயங்களைக் கேட்க விரும்புகிறீர்களா?உங்களைப் பற்றி நான் சில நல்ல வார்த்தைகளைக்  கூற ஆசைப்படுகிறேன்’’ என்று ஆரம்பித்தார், நீதிபதி மிஸ்ரா.

வழக்கறிஞர் சிங்வி புல்லரித்துப்போனார்.

‘’நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ என்று புளகாங்கிதம் அடைந்தார், சிங்வி.

புன்னகை பூத்த நீதிபதி மிஸ்ரா,’’ ஆனால்..’ என்று கூறி சில நிமிடங்கள் இடைவெளி விட்ட அவர்’’ உங்களை பற்றி நல்ல விதமாக கருத்து தெரிவித்தால் வேறு சிலர் என்னைக்  கண்டிப்பார்களே?’’ என்று வருந்துவது போல் கூறிவிட்டு பேச்சை முடித்தார்..

இதன் மூலம் நீதிபதி தெரிவித்த செய்தி என்ன?

’’மோடியைப் புகழ்ந்ததில் தப்பில்லை.

எனது நிலையில் மாற்றமில்லை.

அதனை மீண்டும் ஒரு முறை( வழக்கறிஞர்களுக்கு) தெரிவித்துக்கொள்கிறேன்’’

என்பதே ,அந்த செய்தி.

’இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க?’’  வழக்கறிஞர்களைப்  பார்த்துக் கேட்டுள்ளார், மிஸ்ரா,

– ஏழுமலை வெங்கடேசன்