டில்லி
ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அன்று பாந்திரா ரயில் நிலையத்துக்கு வெளியே புலம்பெயர் தொழிலாளர் வன்முறை குறித்த தொலைக்காட்சி நிகழ்வை நடத்திய விவகாரம் குறித்து ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீது வழக்கு பதியப்பட்டது. அதன் பிறகு பால்கர் கும்பல் தாக்குதல் குறித்த நிகழ்வுக்காக மற்றொரு வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தவறாக பேசியதாகப் பல மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன.
இதையொட்டி அர்நாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் தம்மை கைது செய்ய தடை விதிக்கக் கோரி மனு செய்தார். அதையொட்டி அவரை இன்னும் மூன்று வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
அதன் பிறகு கோஸ்வாமி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் காவல்துறையினர் கோஸ்வாமியை மிகவும் துன்புறுத்துவதாகவும் பத்திரிகையாளர் என்னும் முறையில் செய்தி வெளியிட்டதற்காக பழி வாங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசு சார்பில் வழக்காடும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வாதங்களை மறுத்தார். கோஸ்வாமி எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை எனவும் அவரிடம் சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கோஸ்வாமி இனக் கலவரம் தூண்டுவது மற்றும் இன வெறுப்பு பேச்சுக்களை நிறுத்த வேண்டும் என கூறினார்.
உச்சநீதிமன்றம் முதல் தகவல் அறிக்கைஅக்ளை ரத்து செய்ய மறுத்துள்ளது. மேலும் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 இன் கீழ் இந்த வழக்கை ரத்து செய முடியாது எனவும் மும்பை காவல்துறைக்கு இந்த வழக்கை விசாரிக்க உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.