டில்லி

கோவில் சொத்துக்களுக்குக் கடவுள் மட்டுமே உரிமையாளர்கள் எனவும் பூசாரிகள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவில் சொத்துக்களை அந்தந்த கோவில் பூசாரிகள் நிர்வாகம் செய்வது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கமாகும்.   இந்த சொத்துக்களை ஒரு சில பூசாரிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர்.  இதைத் தடுக்க மத்தியப் பிரதேச மாநில அரசு நில வருவாய் சட்டத்தின் கீழ் வருவாய் பதிவேட்டில் பூசாரிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் ஆணையை ரத்து செய்தது.  மத்திய பிரதேச அரசு இந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.   இந்த வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ எஸ் போபண்ணா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  நேற்று இந்த ம்னு மீதான விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதிகள், “கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் உரிம்கையாளரின் பெயராக அந்தக் கோவில் தெய்வத்தின் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும்.  அந்த நிலங்களுக்கு கடவுள் மட்டுமே உரிமையாளர். கோவில் பூசாரிகள் வெறும் மேலாளர் மட்டுமே எனச் சட்டம் சொல்கிறது.  எனவே கடவுளின் சொத்தை பூசாரிகள் மேலாளராக நிர்வாகம் செய்ய மட்டுமே உரிமை உண்டு

மேலும் இதை செய்யத் தவறினால் வேறொருவரை மேலாளராக நியமிக்கவும் உரிமை உண்டு.  எனவே பூசாரிகள் எப்போதும் கோவில் சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆக முடியாது.   இதுவரை எந்த தீர்ப்பிலும் வருவாய்த்துறை பதிவேட்டில் கோவில் பூசாரிகளைக் கோவில் சொத்துக்களின் உரிமையாளர் எனக் குறிப்பிட உத்தரவு வழங்கப்படவில்லை” என அறிவித்துள்ளனர்.