டில்லி:

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஆப்ரகாமுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் குல்பர்கா மாவட்டத்திற்கு மினி விதான் சவுதாவை மாற்றுவதை எதிர்த்து ஆப்ரகாம் பொது நல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மினி விதான் சவுதா என்பது அமைப்பு கட்டடம். இதை ஒவ்வொரு மாவட்டத்தில் ஏற்படுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.

கல்புர்கி மாவட்டத்தில் 6 கி.மீ தொலைவுக்கு இதை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த முடிவல்ல. மாறாக நில அர்ஜிதம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கும் என்று ஆப்ரகாம் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘‘இந்த மனு பொது நலன் சார்ந்தது அல்ல. 6 கி.மீ. தொலைவுக்கு மாற்றுவது சிறந்த நிர்வாகம் அளிக்கும் அடிப்படையில் தான். அதனால் இது போன்ற அற்பத்தனமான மனுவை தாக்கல் செய்ததற்காக ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்றனர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் கூறுகையில்,‘‘அபராதம் மிக அதிகம். இதை நீதிமன்றம் குறைக்க வேண்டும். பொது நல மனுவை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அபராத தொகையை நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகா அரசு வக்கீல் நாய்க் கூறுகையில்,‘‘இந்த பிரச்னையை மனுதாரர் தேவையின்றி கிளப்பியுள்ளார். நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என்று தெரிவித்தவுடன் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.