டில்லி

நீதிபதி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பம் தபால்துறையால் தாமதம் ஆனதால் வாய்ப்பிழந்தவருக்கு உச்சநீதிமன்றம் வாய்ப்பு அளித்து உதவியுள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் அசுதோஷ் அக்னிஹோத்ரியும் ஒருவர்.  இவர் அனுப்பிய விண்ணப்பம் கடைசி தேதியான ஜனவரி 20க்கு அடுத்த நாள் ஸ்பீட் போஸ்ட் மூலம் வந்து சேர்ந்துள்ளது. அதனால் அவர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

அசுதோஷ் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. பின்பு அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரை தேர்வெழுத அனுமதிக்குமாறும், அந்த முடிவை வழக்கு முடியும் வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது

அந்த உத்தரவின்படி, அவர் எழுதிய தேர்வு முடிவுகள் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டது,  அவர் தேர்வில் வெற்றி பெற்றதை தெரிவித்த உச்சநீதி மன்றம் மத்தியபிரதேச உயர்நீதி மன்றத்துக்கு அசுதோசை நேர்க்காணலுக்கு அழைக்க உத்தரவிட்டுள்ளது.

விளக்கம் அளிக்க முடியாத தபால்துறையின் தாமதத்துக்கு அசுதோஷ் பொருப்பில்லை எனவும், அவர் குறித்த நேரத்தில் தன் விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்பாமல் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பியுள்ளதையும் தனது தீர்ப்பில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது