டில்லி

மோடியால் கடந்த வருடம் சிபிஐ இடைக்கால இயக்குனராக பதவி அளிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் க்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

கடந்த வருடம் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் புகார் சுமத்தினர். அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பி வைத்தது. அப்போது சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை பிர்தமர் மோடி தலைமையிலான குழு நியமித்தது.

இடைக்கால இயக்குனராக பதவி ஏற்ற நாகேஸ்வர ராவ் பலரை பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதில் ஏகே சர்மாவும் ஒருவர் ஆவார்.   சிபிஐ அதிகார் ஏகே சர்மா முசாஃபர்நகர் காப்பகத்தில் நடந்த பலாத்காரங்கள் குறித்த வழக்கை விசாரித்து வந்தார்.  அவரையும் அவருடைய குழுவையும் ஒரு சேர பணி மாற்றம் செய்து ராவ் உத்தரவு இட்டிருந்தார்.

ஏகே சர்மா உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளார். ஆகவே இந்த இட மாற்றம் செய்தது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என நீதிமன்றம் கருதியது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க நாகேஸ்வர ராவ் வரும் 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்றம் தனது நோட்டீசில், “இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப் போகிறோம். நீங்கள் உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாடி இருக்கிறீர்கள். இனி உங்களை இறைவன் தான் காக்க முடியும். இதில் மேலும் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் அதற்காக நீங்களும் சிபிஐ அதிகாரி பாசுராம் ஆகியோரும் வரும் 12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.