டில்லி
டில்லி கவர்னர் கோப்புகளில் நேரம் செலவழிக்காமல் முடிவு எடுப்பதை கவனிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டில்லி அரசுக்கும் டில்லியின் லெஃப்டினெண்ட் கவர்னருக்கும் இடையே வெகுநாட்களாக பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. டில்லி அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகவும் குறைவு என அமைச்சரவை தரப்பில் சொல்லப்பட்டு வருகின்றது. இது குறித்து டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வருடம் ஆகஸ்ட் 4ஆம் தேதி டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆம் ஆத்மி அரசின் சொல்படி மட்டுமே கவர்னர் செயல்பட வேண்டும் என்பதை நிராகரித்தது. அதே நேரத்தில் ஆளும் அதிகாரம் கவர்னரிடம் மட்டுமே இல்லை எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. அத்துடன் அனைத்து முடிவுகளையும் கவர்னரிடம் கலந்தாலோசித்த பின்பே செயல்படுத்த வேண்டும் எனவும் அரசை அறிவுறுத்தியது.
இந்த தீர்ப்புக்க்கான அப்பீல் உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எந்த அதிகாரமும் இன்றி இயங்க முடியாது. அரசின் தினசரி நடவடிக்கைகளிலும் சட்ட எண் 239 ஏ ஏ வைக் காட்டி லெஃப்டினெண்ட் கவர்னர் தடை செய்வது விரும்பத் தகாதது. நாங்கள் பாராளுமன்ற விதிமுறகளை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் எந்த ஒரு உத்தரவுக்கும் அரசு அதிகாரிகள் கீழ்ப்படியாததை எதிர்க்கிறோம்” என வாதாடினார்.
உச்சநீதி மன்ற அமர்வு அரசியல் அமைப்பு சட்டப்படியும், டில்லி உயர்நீதிமன்றத்தின் 2016ஆம் வருட தீர்ப்பின் படியும் டில்லி அரசு லெஃப்டினெண்ட் கவர்னரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறுக்க முடியாது எனவும் அதே நேரத்தில் கோப்புகளை பார்ப்பதில் அதிக நேரம் எடுக்காமல் முடிவுகளை உடனடியாக எடுத்து அரசுக்கு உதவ வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறி உள்ளது./