டில்லி

னநாயக நாடான இந்தியாவில் அரசியல் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படும் டூல்கிட்களை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் முதல் இரு இடங்களிலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.   இதையொட்டி இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்துப் பல டூல் கிட்கள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய டூல் கிட்களுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  நேற்று இந்த மனுவை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம் ஆர் ஷா அமர்வு விசாரணை செய்தது.

விசாரணையில் மனுதாரர் தரப்பில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இது போன்ற டூல்கிட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.  ஆனால் ஜனநாயக நாடான இந்தியாவில் இது போன்ற அரசியல் பரப்புரைக்காகப் பயன்படும் டூல்கிட்களை தடை செய்ய முடியாது என அமர்வு கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.