டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது, பணமதிப்பு அறிவிக்கப்பட்டு,  5ஆண்டுகளை கடந்து 6வது ஆண்டு தொடங்க உள்ள நிலையில்,  இன்று இந்த அறிவிப்பை உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில், இன்று முதல் அரசியல் சாசன பெஞ்ச் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதன்படி, ஈடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான சவால்கள், தாவூதி போஹ்ரா சமூகத்தில் மதமாற்றம் செய்யும் மதப் பழக்கம், மீளமுடியாத முறிவின் அடிப்படையில் திருமணங் களைக் கலைக்கும் எஸ்சியின் அதிகாரம் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படக்கூடிய வழக்குகள் என பட்டியிலிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பணமதிப்பிழப்பு வழக்கும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த முடிவின்படி, நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது.

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டாலும், இதுவரை கருப்பு பணம் ஏதும் மீட்கப்படவில்லை. ஆனால், இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியதுடன்,  பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பலரது வாழ்க்கை சீர்குலைந்தது. உணவுக்குக்கூட பல மக்களிடம் பணம் இருக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

“கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கே இந்த நடவடிக்கை,” என்று தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கொள்கை அறிவிக்கப்பட்டு பல வாரங்களுக்கு பின்னர், வங்கிகளிடம் வந்தடையும் பழைய ரூபாய் தாள்கள் அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், “டிஜிட்டல் இந்தியாவை” உருவாக்கவே இந்த முயற்சி என்று பின்னர் இந்திய அரசு கூறியது.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 99 சதவீத செல்லாத பழைய ரூபாய் தாள்கள் வங்கிகளிடம் திரும்பி வந்துவிட்டன. இதனால், மக்களிடம் கறுப்பு பணம் இருக்கிறது என்று கூறுவது சரியானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.  ஆனாலும், ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி, கள்ளப் பணப் புழக்கம் ஒழிக்கப்படவில்லை.

ஆனால், மக்களிடையே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து உள்ளது.  கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் பயன்பாடு, இணைய வங்கிச் சேவை, பணப்பரிமாற்ற செயலிகள் போன்றவற்றையும் ஏராளமான மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பண மதிப்பிழப்பு அறிவித்து இன்னும் ஒரு வாரத்தில் 6ஆண்டு தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.