டில்லி

த்திய அரசு தீர்ப்பாய நீதிபதி பதவிகளை வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அளிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.   ஆனால் மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வந்து பதவிக் காலத்தை 4 ஆண்டாகக் குறைத்தது.   தீர்ப்பாய உறுப்பினர்களுக்குப் பதவிக்காலம் நிர்ணயம் செய்வதை எதிர்த்து சென்னை பார் அசோசியேஷன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை எனக் கேட்டு அதற்கு அவகாசம் வழங்கியது.   ஆயினும் மத்திய அரசு அதை நிறைவேற்றாததால் கடந்த 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மீது மத்திய அரசுக்கு மரியாதை இல்லை எனவும் எந்த தீர்ப்பையும் மதிக்காமல் பொறுமையைச் சோதிப்பதாகவும் நீதிமன்றம் எச்சரித்தது.

அதன் பிறகு மத்திய அரசு சில தீர்ப்பாயங்களில் நீதிபதிகளை நியமித்தது.  இது குறித்து தலைமை நீதிபதி ரமணா, “தேர்வுக் குழு தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப் பலரின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு அதில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் தேர்வு செய்து மற்றவர்களைக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

எனது தலைமையிலான தேர்வுக்குழு 10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதிபதிகளைத் தேர்வு செய்து பரிந்துரைத்தது. ஆனால் அதில் 3 பேரை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. சட்டத்துறையில் தேர்வுக்குழுப் பட்டியலைப் புறக்கணிக்கவும், காத்திருப்பில் வைக்கவும் முடியாது. மத்திய அரசு எந்த அடிப்படையில்  நியமிக்கிறது?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு,  தேர்வுக் குழு தீர்ப்பாயங்களுக்குத் தலைமைப் பதவிக்கு  ஆட்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. ஆகவே எங்களுக்கு நேரம் வீணாகியுள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்குள் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். அடுத்து விசாரணைக்கு வரும்போது நியமன ஆணைகளோடு வாருங்கள். இல்லையெனில் நியமிக்கப்படாததற்கான காரணத்தோடு வாருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.