டில்லி
சேது சமுத்திர கால்வாயை மாற்றுப் பதையில் செயல்படுத்தக் கோரி ஜெயலலிதா தொடுத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் தற்போது இலங்கையைச் சுற்றி செல்கின்றன. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் வீணாவதால் சேது சமுத்திரக் கால்வாய் அமைக்க திட்டம் இடப்பட்டது. இதன்படி பாக் நீரினையுடன் மன்னார் வளைகுடாவை இணைக்க ராமர் பாலம் என அழைக்கப் படும் பாலத்தின் குறுக்கே ஒரு கால்வாய் வெட்ட திட்டமிடப்பட்டது.
இந்த திட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் கடந்த 2005 ஆண்டு தொடங்கப் பட்டது. அதன் பின் ராமர் பாலத்தை இடிக்க நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் நிறுத்தப் பட்டது. அந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்கக் கோரி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையை முன் வைத்து சுப்ரமணியன் சாமியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் இந்த வழக்கு முடித்து வைக்கப் பட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சுப்ரமணியன் சாமி தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.