டில்லி

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பில்கிஸ் பானு

கடந்த 2002ஆம் வருடம் கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின் குஜராத்தில் பெருமளவில் கலவரம் ஏற்பட்டது.  அதில் பில்கிஸ் பானு என்னும் இஸ்லாமியப் பெண் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.   அவர் குடும்பத்தினரில் பலர் கொல்லப்பட்டனர்.  இதற்கு உள்ளூர் போலீசார் தாக்கல் அளித்த அறிக்கையை புறக்கணித்து உச்சநீதிமன்றம் சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.  சிபிஐ மொத்தம் 18 பேர் மீது குற்றம் சாட்டியது.  அதில் 5 போலீசாரும், இரண்டு மருத்துவர்களும் அடங்குவர்.   சிபிஐ நீதிமன்றத்தில் இதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இதற்கான மேல் முறையிட்டில் 7 பேருக்கு உயர்நீதிமன்றம் தண்டனை அளித்தது.

தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட் ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.   விசாரணையின் போது இந்த வழக்கின் வழக்கறிஞர் ஷோபா தண்டிக்கப்பட்ட ஏழு பேரில் இரு போலீசாரும் இரு மருத்துவரும் குஜராத் அரசுத் துறையில் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை சுட்டிக் காட்டினார்.   இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  “தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை எவ்வாறு போலீசாகவும், மருத்துவராகவும் வேலை செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த குஜராத் அரசின் வழக்கறிஞர் வாகி, உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக் காலம் முடிந்து விட்டபடியாலும், இந்த தண்டனை போதும் என உயர்நீதிமன்றம் கருதுவதாக நினைத்ததாலும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறினார்.   ஆனால் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் “போலீஸ், மருத்துவர் போன்ற பணிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் ஈடுபடுத்தியதற்கான சரியான விளக்கத்தை அரசு உடனடியாக அளிக்க வேண்டும்.  அத்துடன் அரசு சார்பில் இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும் இன்னும் 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]