டில்லி

ரிய நேரத்தில் கட்டிடம் கட்டித் தராத டில்லி கட்டிட நிறுவனம் தங்கள் குடும்பத்தினரின் நகை உட்பட அனைத்தையும் விற்று பணத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நொய்டாவில் அமைந்துள்ள கட்டிடம் கட்டித் தரும் நிறுவனம் ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ்.  ஜேபி குரூப் என்னும் குழுமத்தில் இந்த நிறுவனம் ஒரு அங்கமாகும்.   இந்த நிறுவனம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்திருந்தது.   ஆனல் கட்டிடம் முடித்துத் தர வேண்டிய கெடு முடிந்தும் கட்டிடங்கள் கட்டித் தரப்படவில்லை.  இதனால் கட்டிடம் வாங்கியுள்ளவர்கள் தங்களின் பணத்தை திரும்ப அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கட்டிடம் வாங்கியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தீர்ப்பில், “கட்டிடம் வாங்கியவர்கள் அல்லது அவரது வாரிசுகளுக்கு உடனடியாக பணத்தை நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும். நீங்கள் முன்னுக்கு வர இவர்களின் பணத்தை உபயோகித்துக் கொண்டுள்ளீர்கள்.  எனவே உங்களிடம் உள்ள நகைகள் உட்பட அனைத்து சொத்துக்களையும் விற்றாவது பணத்தை திருப்பித் தர வேண்டும்” என ஆணையிட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் 13 இயக்குனர்களின் சொந்த சொத்துக்களும் நீதிமன்றம் ஈடாக எடுத்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே நிறுவனம் செலுத்தியுள்ள ரூ.2000 கோடியை 32000 வீடு வாங்கியோருக்கு பகிர்ந்தளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், ”நல்ல மனிதர்களுக்கு அழகு உடனே திருப்பித் தருவது.  நீங்களும் நல்ல மனிதர்களாக உடனடியாக அனைவருடைய பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளது. அது மட்டுமின்றி தற்போது இயக்குனர்களின் நெருங்கிய உறவினர்களின் பெயரில் உள்ள சொத்துக்களையும் மற்றவர்கள் பெயரில் மாற்ற தடை விதித்துள்ளது.