டில்லி
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது தேர்தல் வேட்பு மனு குறித்து வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவர் அளித்த வேட்புமனுவில் தன் மீதுள்ள இரு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள விவரத்தை அவர் குறிப்பிடவில்லை. இது தேர்தல் ஆணைய விதிமுறை மீறல் ஆகும்.
கடந்த 1996 ஆம் வருடம் மற்றும் 1998 ஆம் வருடம் அவர் மீது பதியப்பட்ட இரு வழக்குகள் குறித்து அவர் தெரிவிக்காமல் இருந்துள்ளார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று தேவேந்திர பட்நாவிஸ் முதல்வரானார். பிரபல சமூக ஆர்வலரான சதீஷ் உகே என்பவர் வேட்பு மனுவில் போதிய தகவல் அளிக்காததற்கு தேவேந்திர பட்நாவிஸ் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வேட்பு மனுவில் போதுமான தகவல் இல்லாததால் ரத்து செய்யும் கால கட்டம் முடிந்து விட்டதாகவும் தற்போது இது குறித்து முதல்வருக்குத் தண்டனை அளிக்க முடியுமா என்பது மட்டுமே கேள்வியாக உள்ளதாகவும் இந்த மனுவை ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று உச்சநீதிமன்றம் தேவேந்திர பட்நாவிஸ் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் நிலுவையில் இருந்த இரு கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை தேவேந்திர பட்நாவிஸ் வேட்பு மனுவில் தெரிவிக்காதது சட்ட மீறல் எனத் தீர்ப்பளித்துள்ளது.
இது மகாராஷ்டிர முதல்வருக்கும் பாஜகவுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
[youtube-feed feed=1]