டில்லி

புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரை நிபந்தனைகளுடன் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒரிசா மாநிலம் பூரியில் வருடம் தோறும் ரதயாத்திரை விழா 12 நாட்களுக்கு விமர்சையாக நடப்பது வழக்கமாகும்.   இந்த வருட விழா வரும் 23 ஆம் தேதி முதல் நடைபெற இருந்தது.  கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு ரத யாத்திரைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் கடந்த வியாழன் அன்று இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வெள்ளிக்கிழமை அன்று பூரி ஜகந்நாகர் கோவில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.   இதற்குப் பூரி சங்கராச்சாரியார் நிஸ்சலானந்த சரஸ்வதி, “பூரி ரத யாத்திரைக்கு அதிக கூட்டம் வரும் என்பதால் உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரியானதாகும்.  ஆனால் குறைந்த பக்தர்களைக் கொண்டு யாத்திரை நடத்த உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும்” என அறிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி மாநில அரசுகள் ரத யாத்திரையை நடத்த ஒப்புதல் அளித்தால் ரத்து உத்தரவை மாற்றத் தயாராக உள்ளதாக நிபந்தனை விதித்தது  மத்திய அரசுடன் இணைந்து கட்டுப்பாட்டுடன் ரத யாத்திரை நடத்த ஒரிசா அரசு ஒப்புதல் அளித்தது

எனவே ஒரிசாவில் பூரி ஜகந்நாதர் ஆலய ரத யாத்திரையை நிபந்தனைகளுடன் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  வரும் ஜூன் 16 ஆம் தேதி அளித்த தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க நேர்ந்தால் மாநில அரசு ரத யாத்திரையை ரத்து செய்யலாம் என உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.