டில்லி
நிதீஷ்குமார் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்கை மறைத்து மேல்சபை உறுப்பினரானது செல்லாது என்னும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது ஒரு கிரிமினல் குற்றம் பதிவாகி உள்ளது. பார் தொகுதியில் 1991ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது நிதீஷ்குமார். உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சீதாராம் சிங் என்பவரை கொலை செய்ததாகவும் நான்கு பேரை தாக்கியதாகவும் அந்த வழக்கில் உள்ளது.
இதை தனது வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தி எம் எல் ஷர்மா என்னும் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இவ்வாறு கிரிமினல் குற்றத்தை மறைத்ததற்காக நிதீஷ்குமாரின் பீகார் மேல்சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும், இந்த குற்றத்தை மறைத்தது தெரிந்தும் அவரை பதவியில் இருந்து நீக்காததற்கு தேர்தல் ஆணையம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர இது குறித்து சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் 2002ஆம் வருட விதிகளின்படி ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் மேல் உள்ள குற்றங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என உள்ளது. அப்படி இருந்தும் தன் மேல் உள்ள குற்றச்சாட்டை மறைத்ததற்காக நிதீஷ்குமாரின் உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் எனவும் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், மற்றும் கன்வில்கர் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.