டில்லி
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பற்றிய வழக்கை வரும் 2018ஆம் வருடம் ஃபிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் 1853 முதல் நடந்து வருகிறது. பாபர் மசூதி என்னும் மசூதி ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறவும், அதை இஸ்லாமியர்கள் மறுக்கவும் ஆரம்பித்த தகராறு 1885 ஆம் வருடம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததில் முடிந்தது. அதன் பிறகு இந்த வழக்கு பலரால் போடப்பட்டு வந்தது. எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. பின்பு சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என வழக்கு தொடரப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் வருடம் மூன்றாக பிரித்து மூன்று பிரிவினருக்கு வழங்கியது. ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2011ஆம் வருடம் மேல் முறையீடு போடப்பட்டது. அந்த மனுக்களின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று இறுதி வாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை நீதிமன்றத்தில் வைத்தனர். இரு தரப்பிலும் பல ஆட்சேபஙக்ள் எழுப்பப் பட்டன. அதில் ஒன்றாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று விதமான கருத்துக்களை தெரிவித்ததை சுட்டிக்காட்டினர்.
அலகாபாத் நீதிபதிகளின் மூவரின் கருத்து பின் வருமாறு:
நீதிபதி அகர்வால், ”சர்ச்சைக்குரிய அந்தக் கட்டிடம் காலி இடத்தில் கட்டப்படவில்லை. இடிக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தில் இஸ்லாமியர் அல்லாத ஒரு வழிபாட்டுத் தலம் இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. இந்த கட்டிடம் கட்ட உபயோகப்படுத்த பட்ட தூண்கள் மற்றும் பல கட்டுமான பொருட்கள் இடித்து மீண்டும் கட்டிடம் கட்ட உபயோகப்படுத்தப் பட்டுள்ளன” எனக் கூறினார்.
நீதிபதி ஷர்மா “இந்துக் கோவிலை இடித்து மசூதி கட்டியது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உடைந்த கோவிலின் பகுதிகளும், உடைந்த சிலைகளும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டன” என தன் கருத்தை கூறினார்.
நீதிபதி கான், “மசூதி கட்டுவதற்காக எந்தக் கோவிலும் இடிக்கப்படவில்லை. முன்பு இடிந்து போன கோயில் ஏதாவது அங்கு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டிருக்கலாம். இது குறித்து சரித்திர பூர்வமாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும் அதற்கு சாத்தியம் உள்ளது என கூற முடியும்” என தெரிவித்தார்.
இவ்வாறு மூவரும் மூன்று விதமான கருத்துக்களை அப்போது தெரிவித்துள்ளனர்
இறுதியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை வரும் 2018ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று ஒத்தி வைத்தது.