புதுடெல்லி:
கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில், உயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு,தலா ரூ. 30 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
சிஆர்பிஎஃப் படைவீரர்களின் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. அதில் ரூ . 30 லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் தொகையும் அடங்கும். இந்தத் தொகையை உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ, நிதி உதவி அளிக்குமாறும், தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரஜ்னிஸ் குமார் கூறும்போது,நம் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவவேண்டிய தருணம் இது. ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
இன்சூரன்ஸ் தொகை உடனடியாக அவர்களது குடும்பத்தாருக்கு வழங்குவதன் மூலம் சிறு உதவியை செய்ததாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார்.