டில்லி:

ரூ.3,900 கோடி கடனை திருப்பி செலுத்தாத வீடியோ கான் நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வழக்கு தொடர் ந்துள்ளது.

பெரிய அளவிலான வராக்கடனாளிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி தயாரித்துளளது. இதன் 28 நிறுவனங்கள் அடங்கிய 2வது பட்டியலில் வீடியோ கான் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பல வங்கிகளில் ரூ.29,000 கோடி வரை கடன் பெற்றுள்ளது. வீடியோ கான் உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு கட்ட தவறினால் திவால் நடவடிக்கை மேற்கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

எனினும் வீடியோ கான், ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனங்கள் மேலும் கால அவகாசம் கோரியது. ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் மீது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. வீடியோ கான் பெற்ற ரூ.3,900 கோடி கடனை வசூலிக்க தீர்ப்பாயத்தில் எஸ்பிஐ வங்கி முறையிட்டுள்ளது.

‘‘அன்ராக் அலுமினியம், ஜெயஸ்வால் நெகோ இண்டஸ்ட்ரீஸ், சோமா என்டர்பிரைசஸ், ஜெயபிரகாஷ் ஆகிய நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று மூத்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஏசியன் கலர் கோட்டட் இஸ்பாத், கேஸ்டெக்ஸ் டெக்னாலஜிஸ், கோஸ்டல் பிராஜக்ட்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி, ஐவிஆர்சிஎல், ஆர்சிட் பார்மா, செல் மேனுபேக்சரிங், உதான் கால்வா மெட்டாலிக், உத்தாம் கால்வா ஸ்டீல், விசா ஸ்டீல்.

எஸ்ஆர் பிராஜக்ட்ஸ், ஜெய் பாலாஜி இண்ட்ஸ்ட்ரீஸ், மொன்னெட் பவர், நாகார்ஜூனா ஆயில் ரிபைனரி, ருசி சோயா இண்ட்ஸ்ட்ரீஸ், விண்ட் வேர்ல்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பாயம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக 12 கணக்குகளில் 11 கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று தீர்ப்பாயம் உடனடி திவால் அறிவிப்பை வெளியிட்டது. இந்த கணக்குகளில் மொத்தம் 25 சதவீத வராக்கடன் உள்ளது.