கொல்கத்தா: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது, உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலைகொண்டுள்ள நிலையில், இதன் காரணமாக இந்தியாவுக்கும் படையெடுப்பால் ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடுமையாக சரிவடைந்த உலக பொருளாதாரம் சமீப காலமாக சற்றே உயர்ந்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா எண்ணை வளம் மிக்க உக்ரைன்மீது தாக்குதலை தொடங்கி உள்ளது மீண்டும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் சமையல் எண்ணை தேவைகளை பூர்த்தி செய்து வரும் விவசாய நாடு உக்ரைன். இந்தியாவுக்கு தேவையான சுமார் 70 சதவிகிதம் கச்சா சூரிய காந்தி எண்ணை உக்ரைனில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள போரால், இந்தியாவில் எண்ணை விலை தாறுமாறாக உயர வாய்ப்பு உள்ளது.
உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையுயர்வால் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலால், இந்தியாவுக்கு ரூ.95 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. அதாவது ‘உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து விட்டது. அத்துடன் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது.
எனவே விலைய கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்தால், மாதம் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்’ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குறைக்கப்படும் கலால் வரி அடுத்த நிதியாண்டிலும் தொடர்ந்து, 2023ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வும் சுமார் 8–10 சதவீதம் அதிகரித்தால், 2023ம் நிதியாண்டில் அரசின் வருவாய் இழப்பு சுமார் ரூ.95,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும், கச்சா விலை உயர்ந்த மட்டத்தில் இருந்து 67 சதவிகிதம் வீழ்ச்சியடைய சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று முந்தைய ஆய்வுகள் (2018 முதல்) சுட்டிக்காட்டு கிறது எனவே, தற்போதைய உயர் மட்டங்களில் இருந்து கச்சா விலையில் சரிவு சமீபத்திய போக்குகள் மூலம் இன்னும் வேகமாக வரலாம் மற்றும் இது ஒட்டுமொத்த மேக்ரோ முன்கணிப்புக்கு சாதகமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022ல் சில்லறை பணவீக்கம் மீண்டும் 6.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பணவீக்கம் 4.7 சதவீதமாக இருக்கும் என RBI எதிர்பார்க்கிறது. FY23க்கு, CPI பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என RBI எதிர்பார்க்கிறது. “இருப்பினும், எண்ணெய் கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல காரணிகளால் பணவீக்கத்திற்கு தலைகீழ் அபாயங்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலைமதிப்பற்ற உலோகங்களான தங்கம், பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றிலும் பணவீக்கம் காணப்படும் என கூறி உள்ளதுடன், உக்ரைன் விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், கருங்கடலில் வழிசெலுத்தலில் தொந்தரவு செய்யப்பட்டால் கோதுமை மற்றும் சோளத்தின் விலையில் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.