டில்லி,
வரும் பிப்ரவரி 1ந்தேதி மத்திய அரசின் பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, தனிநபருக்கான வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்டு பட்ஜெட்டின்போது, வருமான வரி விலக்கு மேலும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற வில்லை. இந்நிலையில், தற்போதைய பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வருமான வரம்பு குறித்து மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.