டெல்லி:

2019ம் ஆண்டில் 17 ஆயிரம் ஊழியர்களை கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்ப எஸ்.பி.ஐ முடிவு செய்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) கணக்குகளின் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் இருக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக வங்கியின் ஊழியர்கள் தலையில் கைவைக்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

இது குறித்து எஸ்.பி.ஐ மேலாண்மை இயக்குனர் ரனிஷ்குமார் கூறுகையில்,‘‘ எஸ்.பி.ஐ. வசம் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 2019ம் ஆண்டில் 10 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக இருக்கும். துணை வங்கிகளை எஸ்.பி.ஐ.யுடன் இணைக்கும் திட்டத்திற்கு அடுத்த ஆண்டில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு லட்சகணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறேன் என்று முழங்கி வருகிறார். மறுபுறத்தில் பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கபோவதாக அறிவித்துள்ளது. இது போன்ற செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் அதிருப்தி
ஏற்படும் சூழல் தான் நிலவுகிறது.