சாஜகான்பூர்:

உ.பி மாநிலம் சாஜகான்பூரில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் ஸ்கேன் செய்யப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தது. இதை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று வாடிக்கையாளர் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் இப்பிரச்னை போராட்டமாக வெடித்தது.

சாஜகாபூர் ஜலாலாபாத் பகுதியில் நகை கடை நடத்தி வரும் அர்விந்குப்தா என்பவர் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்.ல் கடந்த 2 தினங்களுக்கு முன் ரூ. 10 ஆயிரம் எடுத்தார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 5 வந்தது.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘நான் பணத்தை எடுத்தவுடனேயே ஒரு நோட்டின் வித்தியாசத்தை உணர்ந்தேன். ஏ.டி.எம் வெளியே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது அது போலி என்பது தெரிந்தது. எனக்கு பின்னால் வரிசையில் நின்ற 4 பேர் இதற்கு சாட்சி’’என்றார்.

இவர் உடனடியாக பணத்துடன் வங்கிக்கு சென்றார். ஆனால் வங்கி பணி நேரம் முடிந்துவிட்டது. எனினும் அங்கிருந்த சில ஊழியர்களிடம் இந்த பணத்தை காண்பித்தார். ஆனால், இதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

‘‘அவர்கள் என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். வங்கி மேலாளர் வெளியில் சென்றுவிட்டார். பிறகு வந்து பாருங்கள் என்று மட்டும் கூறினர்’’ என்றார் குப்தா.

ஆனால், குப்தா அங்கிருந்து செல்லாமல் தனது பகுதி வங்கி வாடிக்கையாளர்களையும் அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து ஆர்டிஒ மற்றும் ஜலாலாபாத் காவல் நிலையத்திலும் புகார் செய்தார். ‘‘வங்கி ஊழியர்கள் தான் ஏடிஎம்.ல் பணி நிரப்புகிறார்கள். இதில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது’’ என்று குப்தா குற்றம்சாட்டினார்.

ஆனால் வங்கி மேலாளர் சந்தன் இதை மறுத்தார். அவர் மேலும் கூறுகையில்,‘‘ வங்கியின் ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புகிறார்கள். ஒரு நோட்டு மட்டுமே இப்படி வந்துள்ளதாக குப்தா தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ரூபாய்க்காக ஒரு ஊழியர் அவரது பணிக்கு எதிராக இத்தகைய முடிவை எடுக்கமாட்டார். வங்கி மீதும், ஊழியர்கள் மீதும் வீண் பழி சுமத்த முயற்சி நடக்கிறது. சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

வங்கியின் துணை பொது மேலாளர் வத்ரா கூறுகையில்,‘‘ போலி ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம்.ல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் தான் நிரப்பப்படுகிறது. சிசிடிவி பதிவுகளை பார்த்த பிறகு தான் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.