சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைவாசம் உத்தரவு காரணமாக சென்ற காரணத்தால், ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு ஊழியரான சவுக்குசங்கர் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த சவுக்கு சங்கர் கடந்த 2008ம் ஆண்டு மறைந்த திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சி காலத்தில், காவல்துறை தலைவரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அவரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம்ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்போது,. அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின. இது அப்போதைய கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது. இது தொடர்பாக ஒருநபர் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் (பின்னர் சவுக்கு சங்கர்) கைது செய்யப்பட்டார். அவர்தான் தொலைபேசி தகவல்களை ஊடகங்களில் கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வழக்கு விசாரணை சில மாதங்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்தார். இந்த வழக்கும், இவர் தொடர்பான பணி விசாரணை இன்றுவரை நிலுவையில் இருக்கிறது.
இதையடுத்து சங்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழக மனித உரிமைக் கழகம் என்ற இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் “சவுக்கு” எனும் இணையத் தளத்தில் இணைந்து, அப்போதைய தி.மு.க அரசுக்கு எதிராக எழுதவும் பேசவும் தொடங்கினார். தொடர்ந்து அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல் முறைகேடு களை அம்பலப்படுத்தி வந்தார். இதனால் சவுக்கு சங்கர் என அழைக்கப்பட்டு, பத்திரிகையாளராகவும் மாறினார்.
இவர் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஊழல் பட்டியலில் இடம்பெற்றவர்களில் முக்கியமானவர்கள், அப்போதைய காவல் துறை ஐ.ஜிக்கள் ஜாபர் சேட், மற்றும் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் முக்கியமானவர்கள். மேலும், நக்கீரன் இதழை கடுமையாக சாடியதுடன், அதில் உதவி ஆசிரியராக இருந்த நக்கீரன் காமராஜ் போன்றவர்கள் குறித்தும், அவர்களின் சொத்து சேர்ப்புக்கான காரணம், அவருடன் திமுக அரசுடன் உடனனான நெருக்கம் போன்றவற்றையும் வெளிக்கொணர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, மக்களிடையே பிரபலமானார் சவுக்கு சங்கர்.ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சவுக்கு சங்கரை கைது செய்ய தீவிரம் காட்டினர். ஆனால் சங்கர் தலைமறைவான நிலையில், சவுக்கு தளத்திற்கு தகவல் தருபவர்களை காவல்துறை கண்காணிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த ஒருவரை தாக்கியதாக சங்கர்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன், அவர் பிணையில் வரமுடியாதோ அந்த பிரிவுகளில் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அவரது அம்பலப்படுத்தல்களை எதிர்கொள்ள முடியாத அதிகார வர்க்கம் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை வைத்து அடக்க நினைக்கிறது என விமர்சனம் எழுந்தது. பின்னர் இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சங்கர், சுதந்திரமாக நடமாடி வந்தார். தனது கருத்துக்களை அவ்வப்போது தனது வளைதளத்தில் பதிவிட்டு வருகிறார். விறுப்பு வெறுப்பின்றி, அனைத்து அரசியல் கட்சிகளையும், ஊழல்களையும் மட்டுமின்றி நீதித்துறை, நீதிபதிகளின் தீர்ப்புகளையும் சரமாரியாக விமர்சித்து வந்தார். கடந்த ஜூலை 22-ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது குற்றம் சாட்டியிருந்தார்.
நீதிபதி குறித்தும், நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் உயர்நீதிமன்ற நீதிபதி சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துவிசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கோர மறுத்தால், அவரை 6 மாதம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தற்போது சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே அரசு பணியில் இருந்து சவுக்கு சங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.