சென்னை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசியதை காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் லைவாக வீடியோ வெளியிட்ட நிலையில், அதை மறுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சவுக்கு சங்கர் தன்மீது வேண்டுமென்றே பழிபோடுகிறார் என குற்றம் சாட்டி உள்ளார்.
சவுக்கு சங்கர் அவருக்கு வேண்டிய ஒருவரை மாநிலத் தலைவராக கொண்டு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அதனால்தான் தன்மீது குற்றம் சாட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் புகுந்து சாக்கடையை கொட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தூய்மை பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அனைத்துகட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.வீடு புகுந்து அராஜகத்தை நிகழ்த்தியவர்கள்மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, சென்னை மாநகர காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய சம்பவத்தை ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டித்து உள்ளேன். இவ்விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஆனால், இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் (வாணிஸ்ரீ விஜயகுமார்) இருப்பதாக கூறுகின்றனர். அப்படி யாரும் கிடையாது. அப்படி இருந்தால் நிரூபிக்கப்பட்டும்
அதேபோல, மாநகராட்சி ஒப்பந்தத்தை நான் எடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். நான் எப்படி எடுக்க முடியும்? இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே?
சவுக்கு சங்கருக்கு என் மீது மறைமுகமான அஜென்டா இருக்கிறது. நான் மாநிலத் தலைவராக இல்லையென்றால், அவருக்கு வேண்டிய ஒருவரை மாநிலத் தலைவராக கொண்டு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் தெரியும். டெல்லி தலைமைக்கும் தெரியும்.
குற்றங்களைக் கூறி என்னைத் தலைவர் பொறுப்பிலிருந்து எடுத்து விட்டால், அவருக்கு வேண்டியவரை அப்பதிவியில் அமர்த்தி விடலாம் என அவர் திட்டமிடு கிறார். அவரது செயல்திட்டம் வெற்றி பெறட்டும். என்னை திட்டி அவருக்கு பணம் கிடைக்கிறது என்றால் வாழ்த்துகள். அவர் நிறைய பணம் சம்பாதிக்கட்டும்.
என்மீது அவர் குற்றம்சாட்டியதற்கு நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்னை தொடர்புபடுத்தி இப்போது ஏன் பேசுகிறார். இவ்வளவு நாள் அவர் பேசாதது ஏன்? என்னை திட்டிஅவருக்கு நிறைய பணம் கிடைக்கிறது என்றால் நல்லதுதானே” என்றார்
தூய்மைப் பணியாளர்கள் கையால் மலத்தை அள்ளும் நிலையை மாற்றி, இந்தியாவிலே எங்கும் இல்லாத திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். அதில் தவறு இருந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம். அதைவிடுத்து, தூய்மைப் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவது, அவர்கள் குடித்துவிட்டு தூங்குகிறார்கள் என்று பேசுவதெல்லாம் ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.