கொல்கத்தா

ங்க கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்கூலி பாஜக போராட்டம் நடத்தியும் இம்ரான் கான் படத்தை நீக்க மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்கூலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய கிரிக்கெட் சேவையை பாராட்டி நான்கு வருடம் முன்பு இவரை வங்க கிரிக்கெட் சங்க தலைவராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்தார். இந்த சங்கத்தின் சார்பில் ஈடன் தோட்ட மைதானத்தில் பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த படங்களில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவரும் இந்நாள் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் படமும் உள்ளது. பாஜகவினர் இம்ரான் கான் படத்தை நீக்க வேண்டும் என வங்க கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு சவுரவ் கங்கூலி மறுத்து விட்டார். கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என அவர் தெரிவித்த கருத்துக்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.

இம்ரான் கான் புகைப்படத்தை அகற்றக் கோரி சவுரவ் கங்கூலியை எதிர்த்து மேற்கு வங்க மாநில பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஒட்டி சவுரவ் கங்குலி தனது முடிவை மாற்றிக் கொள்ள போவதில்லை எனவும் இம்ரான் கான் புகைப்படத்தை அகற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.  பாஜக தலைவர்கள் சவுரவ் கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இம்ரான் கான் புகைப்படம் மட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் ரசீம் ராஜா ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாஜகவினர் இம்ரான் கான் புகைப்படத்தை மட்டும் அகற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.