பால்ஜுராஷி, சவுதி அரேபியா

வுதி அரேபியாவில் பால்ஜுராஷி நகரில் கடையொன்றில் கொரோனாவை பரப்ப எச்சில்  துப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா உலகெங்கும் படு வேகமாகப் பரவி வருகிறது.  இந்த வைரஸை பரப்ப ஒரு சில மக்கள் நாணயங்களை எச்சில் படுத்துவதும் உணவுப் பொருட்களின் மீது துப்புவதுமாக உள்ள செய்திகள் வருகின்றன.   அவற்றைப் பொய் என பலரும் நினைத்து வருகின்றனர்.   ஆனால் சவுதி அரேபியாவில் அவ்வாறு நடந்துக் கொண்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள பால்ஜுராகி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கடைக்கு ஒரு இளைஞர் வந்திருந்தார்.  அவர் சவுதி அரேபிய நாட்டை சேராதவர் எனக் கூறப்படுகிறது.  அவர் அங்கு பொருட்கள் வாங்கும் தள்ளு வண்டிகள் மற்றும் அங்குள்ள பொருட்கள் மீது எச்சில் துப்பி உள்ளார்.  இதைக் கவனித்த கடை பணியாளர்கள் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர்.

அவரை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் மருத்துவச் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது.  அதையொட்டி சவுதி அதிகாரிகள் அந்தக்கடையை தற்காலிகமாக மூடி உள்ளனர்.  மேலும் அந்தக் கடை ஊழியர்களை மருத்துவச் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைத் தேடி வருகின்றனர்.

சவுதி அரேபிய அதிகாரிகள் அந்த இளைஞர் செய்தது கொலை முயற்சிக்குச் சமமானது என்பதால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.  அவர் இந்த நோய் ஒரு உயிர்க் கொல்லி எனத் தெரிந்தும் அதைப் பரப்ப முயன்றதால் அவரை கொலைக் குற்றவாளி எனவே நீதிமன்றம் கருதும் என வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.