ரியாத்

சௌதி அரேபிய இளவரசி கார் ஓட்டுவது போல் வெளியான பத்திரிகை புகைப்படம் பழமைவாதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சௌதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட தடை இருந்தது.   இந்தத் தடையை நீக்கக் கோரி 11 பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.   இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.    சமீபத்தில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையை அளிக்கப் போவதாக அறிவித்தார்.  அதன்படி இந்த 11 ஆர்வலர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டனர்.

சௌதி இளவரசரின் இந்த அறிவிப்பை அங்குள்ள பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.   இளவரசரின் இந்த அறிவிப்பு இஸ்லாத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சௌதி அரேபிய இளவரசி ஹேய்ஃபா பின் அப்துல்லா அல் சௌத்  அங்கு வெளியாகும் வோக் என்னும் ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்தில் தோன்றி உள்ளார்.  இந்தப் படத்தில் அவர் ஒரு காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டுள்ளார்.  மேலும் கைகளில் கையுறையும் காலில் குதிகால் உயர்ந்த காலணியும் அணிந்துள்ளார்.

இளவரசியின் இந்த புகைப்படம் பழமைவாதிகள் இடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   அத்துடன் பெண்ணிய ஆர்வலர்கள் சிலரும் இந்த புகைப்படம் முன்பு கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரின் புகைப்படம் எனவும் அது போட்டோஷாப் மூலம் இளவரசியின் முகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.   மேலும் கைது செய்யப்ப்ட்ட 11 பேரில் நான்கு பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள ஏழு பேர் குறித்து அரசு ஏதும் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.