ரியாத்,
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளதில் சவுதி இளவரசர் பரிதாபமாக பலியானார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் பலியானார்.
சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாணத்தின் ஆளுநராக கடந்த ஏப்ரல் 22ந்தேதிதான் பதவியேற்றார் இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் 7 அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் சென்றபோது திடீரென மாயமானது.
இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இந்த விபத்தில் இளவரசர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பலியான மன்சூர் முன்னாள் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.