ரியாத்:

சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்ட சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவு அடுத்த 3 மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் முதல் பெண்கள் வாகனங்களை ஓட்டலாம் என்று சவுதி மன்னர் சல்மான் கடந்த செப்டம்பரில் அறிவித்திருந்தார். இந்த தடையை நீக்கி புதிய விதிமுறைகளை சவுதியின் போக்குவரத்து இயக்குனரகம் வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் வாகனம் ஓட்டுவதில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை அளிக்கப்படவுள்ளது.

பெண்கள் ஓட்டும் கார்களுக்கு சிறப்பு பதிவு எண் பலகை பொருத்தும் திட்டம் எதுவும் இல்லை. பெண்கள் ஓட்டும் வானங்களில் ஏற்படும் விபத்து, விதிமீறல்களை விசாரிக்க பெண்களை கொண்டு செயல்படும் சிறப்பு விசாரணை மையம் ஏற்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் வாகனம் ஓட்ட பெண்களுக்கு தடை விதித்துள்ள ஒரே நாடு சவுதி தான்.

வளைகுடா பேரரசின் இந்த செயல்பாட்டை அடக்கு முறையின் அடையாளமாகவே உலகத்தின் பார்வையில் இருந்தது. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்கும் முடிவை சர்வேச அளவிலும், வளைகுடா பேரரசுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தடையை மீறிய பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இதை எதிர்த்து போராடி வரும் பெண்கள் அமைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருதப்படுகிறது. இன்னும் பெண்கள் கல்வி பயிலவும், பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தந்தை, சகோதரர், கணவர் ஆகியோரது அனுமதியை பெற வேண்டிய நிலை தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.