சவுதி அரேபிய மன்னர் சல்மான் அரசின் புதிய தீர்ப்பாணை மூலம் சவுதிப் பெண்கள், இனி கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற சில அரசாங்க சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள தங்களின் ஆண் பாதுகாவலரின் / காப்பாளரின் முன் அனுமதி பெறத் தேவையில்லை எனும் சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது.
சவூதி அரேபியப் பெண்கள் மெய்காப்பாளர்/பாதுகாவலர் சட்டத்தின் படி, ஒரு பெண் பிறந்ததிலிருந்து தந்தை, சகோதரன், கணவன் அல்லது நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றாலும் கூட ஆண் மெய்காப்பாளரின் சம்மதம்/அனுமதியை பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெண்கள் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய, கல்வி கற்க, பயணம் மேற்கொள்ள, திருமணம் செய்ய வேண்டுமென்றால் கூட மெய்காப்பாளரின் அனுமதி அவசியம்.
ஆனால் இப்போது மன்னரால் வெளியிடப்பட்டுள்ள ஆணையின் மூலம், சவுதி அரேபியப் பெண்களுக்குச் சில கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மன்னர் சல்மானின் புதியஆணை காப்பாளர் சட்டத்தை முழுவதும் தடை செய்யவில்லை. எனினும் சவுதி நாட்டு சமூக ஆர்வலர்கள் இதனை வரவேற்றதுடன் விரைவில் இந்தச் சட்டம் ஒழிக்கப் பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இயக்குனர், மகா அக்கேல் நம்மிடம் கூறும்போது, “இப்போது குறைந்தபட்சம், பாதுகாவலர் சட்டம்குறித்த விவாதத்தைத் துவக்க உதவியுள்ளது”, பெண்கள் சுதந்திரமானவர்கள். சுயாதீனமானவர்கள், தங்களை தானே கவனித்துக் கொள்ள முடியும். இந்தப் புதிய ஒழுங்குப் பெண்கள் தங்கள் ஆண் பாதுகாவலன் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றத்தில் தங்களை பிரதிநிதித்துவம் படுத்திக்கொள்ள வழிவகை செய்துள்ளது என்று அர்த்தம்.” என்றார்.
பெண்கள் வாகனம் ஓட்ட நீடிக்கும் தடை:
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. மன்னரின் தற்போதைய ஆணை இந்த ‘சட்டத்தை’ ரத்து செய்ய வில்லை என்றாலும், வேலைவாய்ப்பு வழங்கும் அலுவலகம் அல்லது நிறுவனம், பெண்கள் பாதுகாப்பாய் பணிக்கு வந்துசெல்ல போக்குவரத்து ஏற்பாது செய்யவேட்னும் எனும் ஒழுங்கு விதியை உறுதி செய்துள்ளது.
சமீபத்தில் ஐ.நா. சபையின் உலக பெண்கள் முன்னேற்ற அமைப்பிற்கு சவுதி அரேபியாவை தேர்வு செய்தது. அந்தச் செய்தி உலக மக்களிடிய்யே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப் பட்ட்து. இந்நிலையில், மன்னரின் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதிபராகத் தன் முதல் சர்வதேச சுற்றுப்பயணம் சவூதி அரேபியா செல்வது என அறிவித்த அதே நாளில் சவுதி மன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.
சவூதி அரேபியாவில் நீண்டகாலமாக பிற்போக்குத்தனமான பாதுகாவலர் சட்டம் (Guardian rule) இருந்து வருவதைக் கண்டித்து சவுதி அரேபிய சமூகஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு, சுமார் 2,500 பெண்கள் சவூதி அரேபிய அரசின் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இந்தப் பிற்போக்குச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்திச் சுமார் 14,000 கையெழுத்துக்களோடு ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். இவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி, நானே என் காப்பாளன் எனும் ஹேஸ்டாஸ்ட் காட்டுத்தீயாய் பரவி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆறுதலாய், டிசம்பர் 2015 சவூதி அரேபியாவில் பெண்கள் நகராட்சி தேர்தல்களில் முதல் தடவையாக வாக்களித்தனர்.
எனினும், சமுதாய சமத்துவம் என்று வரும்போது சவுதி அரேபியா உலகின் மிகவும் பிற்போக்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் 2015ம் ஆண்டின் உலகளாவிய பாலின சமத்துவ இடைவெளிகுறித்த அறிக்கையில், 145 நாடுகளில் 134 வது இடத்தைச் சவுதி அரேபியாவிற்கு பாலின சமத்துவத்திற்காக வழங்கியுள்ளனர்.