சவுதி ஏர்லைன்ஸ் : கவர்ச்சி உடை அணிந்து வந்தால் நோ அனுமதி!

ரியாத்

வுதி ஏர்லைன்ஸ் கை கால்கள் மற்றும் உடலின் சில பாகங்கள் தெரியும் உடையுடன் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

சென்ற வருடம் யுனைடெட் ஏர்லைன்ஸ் லெக்கின்ஸ் அணிந்த பெண்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அறிவித்தது.   சிகாகோவை சேர்ந்த இந்த விமான நிறுவனம், இந்த உடைகளை அணிந்து வந்த இரு பெண்களை விமானத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை.   அதே போல மற்றொரு பெண் உடை மாற்றிக் கொண்டு வந்ததும் அனுமதிக்கப்பட்டார்.   இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மற்றொரு நிறுவனம் துணை சேர்ந்துள்ளது.   சௌதி அரேபியன் ஏர்லைன்ஸ் எனப்படும் சவுதி ஏர்லைன்ஸ் தற்போது பயணிகளுக்கு உடை கட்டுப்பாடு விதித்துள்ளது.   கைகள் மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்து வரும் பெண்களும்,  அரைக்கால் டவுசர் அணிந்து வரும் ஆண்களும் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார் என அறிவித்துள்ளது.   மெல்லிய துணியினால் ஆன உடைகளை அணிந்து வரும் பெண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி டிவிட்டர் பயணி ஒருவர் இனி இந்த விமானங்கள் “புனித விமானங்கள்” என கேலி செய்துள்ளார்.   அதற்கு முன்னாள் சுற்றுலாத்துறை தலைவர் அலி அல் கமதி, இது சர்வதேச விமான பயண நிறுவனங்கள் சங்கத்தின் வழிமுறைப்படி இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   ஆனால்  சங்கம் இதை மறுத்துள்ளது.   உடை கட்டுப்பாடு விதிக்கும் உரிமை அந்தந்த விமான நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அதற்கு சங்கம் வழிகாட்டுதல் ஏதும் வரையறுக்கவில்லை என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சவுதி அரசாங்கம்,  சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்க்க போவதாக அறிவிப்பு செய்திருந்தது.   ஆனால் அந்த அறிவிப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Saudi airlines announced that passengers wearing dress exposing hands legs will not be allowed to travel