ரியாத்:
ளைகுடா நாடுகளில் வேலை செய்யும்  பெரும்பாலான  இந்தியர்கள் வேலை இழந்ததால் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்திய அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வளைகுடா நாடுகளான குதவத், கத்தார், ஓமன், சவுதி போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர்.  அதிக சம்பளம் என்ற காரணத்தால் அங்கு வேலை செய்ய இந்தியவளிடையே ஆர்வம் அதிகம். இதன் காரணமாக ஏராளமானோர் அங்கு பணி செய்து வருகின்றனர்.

உணவு வழங்கப்படும் காட்சி
உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் காட்சி

எண்ணை வளம் மிக்க இந்த வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணையின் விலையை பொருத்தே அமைகிறது.  ஆனால் சமீப காலமாக கச்சா எண்ணை வீழ்ச்சியால் வளைகுடா நாடுகளின்  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து  வருகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான எண்ணை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையை நோக்கி உள்ளது.  இதனால் அங்கு பணியாற்றும் மற்றும் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
மூடப்பட்ட நிறுவனங்களில்  பிரபலமான ஒன்று  லெபனான் நாட்டைச் சேர்ந்த ‘சவுதி ஓஜர்’. இந்த நிறுவனத்தின் சவுதி கிளையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்தியர்கள் மட்டும் 800–க்கும் மேற்பட்டவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்டதால் அங்கு வேலை செய்த இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக சவுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் அடுத்த வேலை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது இந்திய தூதரகத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இந்திய அரசு சார்பாக அல்சுமைசி, சிஸ்டன், சோஜெக்ஸ், ஹைவே, தைப் போன்ற இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது..
முகாம்களில் தங்கி உள்ள தொழிலாளர்கள் பல நாட்களாக உணவின்றி பட்டினி கிடப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பட்டினியால் வாடும் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அங்குள்ள இந்தியர்களும்  முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மா  டுவிட்டர் மூலம்  கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் முகாம்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி  வருகின்றனர். கடந்த 3 நாட்களாக சுமார் 15 டன் உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா கூறியதாவது:
இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அங்கு வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இதைப்போல மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த பிரச்சினை குறித்து சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறி உள்ளார்.
இதற்கிடையில் அங்கு வேலை இல்லாமல் முகாம்களில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் தாய்நாடு திருப்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆகவே அவர்களை  இந்தியா அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தெரிகிறது.