ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைபேசி சேவையைவிட மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் மற்றும் தொலைபேசி சேவை மக்களைவிட தீவிரவாதிகளுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்று பேசியுள்ளார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்.
ஜம்மு காஷ்மீரில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் போஸ்ட் பெய்டு ஃபோன் சேவைகள் செயல்பாட்டிற்கு வந்தன.
இதனையடுத்துப் பேசிய கவர்னர் மாலிக், “மக்களுக்குத் தொலைபேசி சேவையைவிட வாழ்க்கைதான் முக்கியம். மக்கள் முன்னரே தொலைபேசி இல்லாமல் வாழ்ந்துள்ளனர். எனவே, தற்போது தொலைபேசி சேவை என்பது தீவிரவாதிக்ள அணிதிரள்வதற்குத்தான்.
தற்போது போஸ்ட் பெய்டு சேவைகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து, விரைவில் இணைய சேவைகளும் பள்ளத்தாக்கில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்று பேசினார்.
திங்கட்கிழமை மதியம் வாக்கில், சுமார் 40 லட்சம் போஸ்ட் பெய்டு மொபைல் சேவைகள் செயல்பாட்டிற்கு வந்தன.
காஷ்மீரில் மனித உரிமைகள் மிகவும் மோசமான முறையில் நசுக்கப்படுகின்றன என்ற தகவல்கள் பலதரப்பிலிருந்தும் வந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.