சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில்  நடைபெற்ற கலாட்டாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. இதனால், அந்த கட்சி வளர்வதற்கு பதில் தளர்வையே சந்தித்து வருகிறது. மேலும், ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கை நேரடியாக கண்டிக்க திராணியற்றும் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், மாநில பொருளாளருமான ரூபி மனோகரனுக்கும் கட்சி தலைமைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று முன்தினம்  சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், நெல்லை மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை மாற்றக்கோரி கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால்,  சத்தியமூர்த்தி பவன் வன்முறைக்களமானது. பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. வன்முறையிளர்களை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னத்தில் தாக்கியதும் பேசும்போருளானது. இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகின.

இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், நெல்லையில் இருந்து வந்தவர்களை அவர்கள் வந்த வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் கட்சி அலுவலகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர், கட்சியின் தேசிய செயலர் வல்ல பிரசாத், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் தலைமையில், முன்னாள் மாநில தலைவர் கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற உயர்நிலை குழு கூட்டம் கூடியது.

அதில், இந்த வன்முறைக்கு காங்கிரஸ் எம்எல்ஏவும், பொருளாளருமான ரூபி மனோகரன்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.  அவரை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தலைமைக்கும் அறிக்கை அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு  அகில இந்திய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.ராமசாமி கூறும்போது, “கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம், வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. அதில் உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, “ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ரூபி மனோகரன் மது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே, சத்தியமூர்த்திபவன் மோதலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.