புதுடெல்லி:
நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு நாட்டு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஹத்ராஸ் பெண்ணின் வீட்டுக்கு செல்ல அரசியல் கட்சியினரை அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஹர்தாசுக்கு மீண்டும் ராகுல்காந்தி செல்வதை அடுத்து, டெல்லி – நொய்டா நெடுஞ்சாலையில் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர். இதையறிந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் அப்பகுதியில் திரண்டனர். இதனிடையே, தான் ஹத்ராஸ் செல்வதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி டிவிட்டரில் பதிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சுமார் 20 எம்.பி.க்கள் உடன் ராகுல்காந்தி ஹத்ராஸ் புறப்பட்டார். பிரியங்கா காந்தி வாகன ஓட்டியாக ராகுல்காந்தியை அழைத்துச் சென்றார். அவர்களை தொடர்ந்து பிற காங்கிரஸ் எம்பிக்கள் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்டனர். இந்த குழுவில் தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரும் இடம்பெற்றனர்.
இந்நிலையில் நொய்டா எல்லையில் சென்ற போது, அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். பின்னர் காங்கிரசாருடன் பேச்சு நடத்திய காவல்துறையினர், 5 பேர் மட்டும் ஹத்ராஸ் செல்ல அனுமதி அளித்தனர். இதையடுத்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், அதிர் ரஞ்சன் சவுத்ரி, முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஹத்ராஸ் புறப்பட்டனர்.
இரவு 7 மணியளவில் ஹத்ராஸ் சென்றடைந்த ராகுல் மற்றும் பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து பேசினர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் உறுதியாக நிற்பதாக தெரிவித்தார். இந்த் நிலையில் நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.