சாத்தூர்:
விருதுநகரை அடுத்த சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த தனயாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சட்டவிரோதமாக பேன்ஸி ரக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, வெடி மருந்துகளில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த கோர விபத்தில் ஆலையின் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த கோர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போருது, பட்டாசு ஆலை கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
விசாரணையில் அவரது பெயர் குருசாமி (50) என்பது தெரிய வந்துள்ளது. அவரது உடலை மீட்ட ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமானது என்றும், உரிமம் பெற்ற ஆலை என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.