சென்னை:
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்தித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன், டிடிவி தினகரன் பக்கம் சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக வலம் வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். ஆனால், அதன்பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவியது. அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் ராஜவர்மன்.

இதனிடையே நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைகூலிக்குதான் பதவி என்றாகி விட்டது. அதிமுக இயக்கத்திற்காக பாலாஜியா அல்லது பாலாஜிக்கு இயக்கமா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. என்னை கொலை செய்து விடுவதாக பல மிரட்டல்கள் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. வேட்பாளர் பட்டியலில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு இல்லை” என குமுறினார்.  இந்நிலையில் எம்.எல்.ஏ ராஜவர்மன் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார்.