தூத்துக்குடி: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட, ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
காவல்துறையினரால் விசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்றும், அவர் களின் உடலில் ஏற்பட்ட ரத்தக்கசிவே, உயிரிழப்பு காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது.
இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மகனை தாக்கிய விவகாரம், தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் மேஜை போன்றவைகைள தடவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 5 வாகனங் களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில், விசாரணை செய்தனர்.
இதன் காரணமாக, சாத்தான்குளம் காவல்நிலைய நுழைவுவாயிலில், தடுப்பு அமைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில், காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.