மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கினர் என சிபிஐ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு, அவர்கள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் புகழ்வாசுகி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலிய உதவியாளர் அருணாசல பெருமாள் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, போலீஸ் நிலையத்தில் இருந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் உடலில் படுகாயங்கள் இருந்தன” என்று கூறியுள்ளார். இதுவரை சாட்சியம் அளித்தவர்கள் தந்தை-மகனின் உடல்களில் இடுப்பு பகுதியில் தான் பெரும் காயங்கள் இருந்ததாக கூறியதாகவும், இவர் அளித்த இந்த தகவல், மற்றவர்களின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபட்டதாக கருதப்படுவதாகவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கினர் என தெரிவித்துள்ளது. காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களை காப்பாற்றவே என சிபிஐ தரப்பு வாதம் செய்ததுடன், அதே வேளைய்ல், நாடு முழுவதும் இரவில் மக்கள் நிம்மதியாக தூங்குவதற்கு காரணம் போலீசார் தான் எனவும் கூறியது.