பெங்களூரு: கொரோனா தொற்றால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை சீரானது என்று தெரிவித்துள்ள மருத்துவ மனை நிர்வாகம், இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை (27ந்தேதி) விடுதலையாக உள்ளார். இதற்கிடையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஜனவரி 20 ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (BMCRI) சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து, விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. சசிகலா (Sasikala) சீராக உணவு உட்கொள்கிறார். உதவியுடன் நடக்கிறார்.
சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு 178 ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.