சென்னை: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 7ந்தேதி சென்னை வருவதாக இருந்த நிலையில், 8ந்தேதி காலை பெங்களூரில் இருந்து புறப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு, ரூ.10 கோடி அபராதும் செலுத்திவிட்டு, கடந்த 27ந்தேதி விடுதலையான சசிகலா கொரோனா தொற்று காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வரும் 7ந்தேதி தமிழகம் திரும்புவதாக, டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சசிகலா வரும் 8ந்தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், சசிகலா வரும் 7ஆம் தேதிக்கு பதிலாக 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு அறிக்கை ஒன்றை டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கிறார். அதில், 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் தோழியாக, தாயாக மிகுந்த விசுவாசத்தோடு காத்து நின்றவர் சசிகலா. அவரது மறைவிற்கு பின்னரும் நான்கு ஆண்டுகள் அவருக்காக சிறையில் துன்பங்களை தாங்கி தற்போது வெளியே வந்திருக்கிறார்.
தியாகத்தலைவி சசிகலா வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் வருகிறார். அந்த நாளை திருவிழா போல கொண்டாட நாம் தயாராகி வருகிறோம். நம்முடைய வரவேற்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாவற்றிலும் யாருக்கும், எந்தவித இடையூறும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக எல்லையில் தொடங்கி சென்னை வரை சசிகலாவை வரவேற்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். காவல்துறையினர், போக்குவரத்து, பொதுமக்களுக்கு எந்த இடத்திலும் தொந்தரவு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டும். அந்த ஒற்றைக் குறிக்கோளில் ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு நிற்போம். புதிய சரித்திரம் படைப்போம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.