கோவை,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நிதிபதி கிருஷ்ணசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியின் மற்றும் அதிமுகவிலே குரல் எழுந்ததால், அதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவின் உறவினர்கள் மேலும் திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், அப்பல்லோ மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் சுதாசேஷையன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட அவரது உறவினர்களுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. விசாரணை ஆணையத்தின் சம்மனுக்கு தனது வழக்கறிஞர்மூலம், தன்மீது புகார் கூறியது யார் என்பதுபோன்ற சில கேள்விகளை எழுப்பியிருந்தார் சசிகலா.
இந்நிலையில், இன்று கோவை சென்றுள்ள விசாரணை ஆணைய நீதிபதி கிருஷ்ணசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இதுபரை பலரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும் இன்னும் 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என்றும் கூறினார்.