நெட்டிசன்:
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள்  நேற்று முன்தினம் சென்று வந்தார்.
இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாக தெரிவித்திருக்கிறார்.

ராஜாத்தி - சசிகலா
ராஜாத்தி – சசிகலா

மேலும் அந்த பதிவில் சங்கர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. இரவு 9.40 மணியளவில் சசிகலாவை ராசாத்தி அம்மாள் சந்தித்துள்ளார்.
சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது.  இந்த சந்திப்பின்போது, தன் மீதோ, தன் உறவினர்கள் மீதோ, எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று சசிகலா ராசாத்தி அம்மாளிடம் கதறி அழுதுள்ளார். இருக்கும் சொத்துக்களை காப்பாற்ற உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார். தான் உள்ளிட்ட உறவினர்கள் மீது எவ்விதமான சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். மத்திய பிஜேபி அரசு, ஓ பன்னீர் செல்வத்தை முதன்மை அமைச்சராக நியமித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தன் கையை விட்டு அகல்வதை நன்றாக புரிந்துள்ள சசிகலா, இறுதிக் கட்டமாக சொத்துக்களையும் உறவினர்களையும் காப்பாற்றுவதற்காக, ராசாத்தி அம்மாளிடம் தூது விட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்துமாறும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் சசிகலா.
பிஜேபி கவனமாக காய் நகர்த்தி, பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற உத்தேசித்து வரும் நிலையில், சசிகலா திமுகவுக்கு தூது விட்டுள்ளது, மிக முக்கிய அரசியல் நகர்வுகளை காட்டுகிறது” – இவ்வாறு சவுக்கு சங்கர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.