சென்னை:
ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும் கவனித்து வந்த நிலையில், தற்போது (இளவரசி மகன்) விவேக் நிர்வாகத்தை ஏற்றுள்ளார்.
ஜெயாடிவி தொடங்கியதில் இருந்தே டாக்டர் வெங்டேஷின் சகோதரிகள் அனுராதாவும், பிறகு பிரபா சிவக்குமாரும் கவனித்து வந்தனர். அனுராதா டிடிவி தினகரனின் மனைவியாவார். பிரபா, பிரபல டாக்டர் சிவகுமாரின் மனைவி.
ஒரு கட்டத்தில் அனுராதா, டிடிவி தினகரன் ஆகியோரை, போயஸ் இல்லத்துக்கு வர தடை விதித்தார் ஜெயலலிதா. ஆனால் பிரபா மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. இவர்களுக்கு போயஸ்கார்டன் இல்லம் செல்ல எப்போதுமே அனுமதி இருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்துக் கொண்டதில் சிவகுமார் முக்கிய பங்கு வகித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் டிடிவி தினகரன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார். அதன் பிறகு அவரது மனைவி அனுராதா மீண்டும் ஜெயாடிவி அலவலகத்துக்கு வரத்துவங்கினார்.
இந்த நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி சசிகலா ஆகியோரை சந்திக்க சில தினங்களுக்கு முன் விவேக் சென்றார். அப்போது விவேக்கிடம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் சசிகலா.
அப்போது அவர், “ஜெயா டிவி நிர்வாகத்தில் இனி அனுராதா எக் காரணம் கொண்டும் தலையிடக் கூடாது. விவேக் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா ஆகியோர் ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளட்டும்” என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து, சென்னை திரும்பிய விவேக் உடனடியாக ஜெயா டிவி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டி.வியின் முக்கிய நிர்வாகியை போயஸ் இல்லம் அழைத்த விவேக், “இனி டிவி நிர்வாகத்தில் என்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கப்படக்கூடாது. வேறு யாராவது தலையிட்டால் உடனடியாக என்னைத் தொடர்புகொண்டு பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
“இது ஒரு முக்கிய முடிவு” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். “ஜெயாடிவி நிர்வாகத்தில் இருந்து டிடிவி தினகரன் மனைவி அனுராதா கழற்றிவிடப்பட்டிருக்கிறார். மெல்ல மெல்ல தினகரனை கட்சியிலிருந்தே ஓரம்கட்ட சசிகலா தீர்மானித்திருக்கிறார்” என்று சொல்லி அதிரவைக்கிறார்கள்.
தினகரன் அவசரப்பட்டு செயல்பட்டதால் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்து சிக்கிக்கொண்டார் என்று நினைக்கிறாராம் சசிகலா. ஆகவே இனி நிர்வாக ரீதியாக டிவியிலோ, கட்சியிலோ தினகரன் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்றும் தீர்மானித்துவிட்டாரம். இதன் வெளிப்பாடுதான் ஜெயாடிவி நிர்வாகத்தில் இருந்து தினகரன் மனைவி வெளியேற்றப்பட காரணம் என்றும் தெரிவிக்கிறார்கள்.