பெங்களூரு:
தனது கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை செய்துகொண்டிருப்பதை அடுத்து அவரைக்காண பரோலில் வருகிறார் வி.கே. சசிகலா.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருக்கிறார். இந்த நிலையில், தனது கணவரை சந்திக்க 15 நாள் பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பித்தார்.
இந்த மனு குறித்து, கர்நாடக சிறைத்துறை, தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தது. அதில், சசிகலா பரோல் வேண்டி கூறிய காரணங்கள் உண்மையா என்றும், தமிழகத்தில் அவருக்கு அளிக்கப்பட இருக்கும் பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது.
கர்நாடக சிறைத்துறையின் கேள்விக்கு தமிழக காவல்துறை மின்னஞ்சல் மூலம் இன்று பதில் தகவல் அனுப்பி உள்ளது. சசிகலாவின் கணவர், சிகிச்சை பெற்றுவருவது உண்மைதான் என்றும், தமிழகத்தில் சசகிலாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே சென்னை தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கப்போவதாக சிறைத்துறைக்கு சசிகலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அதிகாரிகள் கூட்டம் கூடுகிறது. இதில் சசிகலாவுக்கு எத்தனை நாள் பரோல் அளிப்பது, எந்தெந்த நிபந்தனைகள் விதிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும்.
செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்களைச் சந்திக்கக்கூடாது என்று சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்றும் நிபந்தனைகளை மீறினால் மூன்று வருடங்களுக்கு பரோல் கிடைக்காது என்றும் கூறப்படுகின்றன.
சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு இன்று மதியம் மூன்று மணி அளவில் சசிகலா சிறையை விட்டு வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.